oComics.com

பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்!

காணும் பொங்கல் மகிமை!

காணும் பொங்கல் என்பது இந்த நவீன காலத்தில், டூரிஸ்டிற்கு கிடைத்த விடுமுறை போல் ஆகிவிட்டது. நாம் பார்க்காத பல இடங்களை நம் குடும்பத்துடன் வெளியே சென்று பார்த்து வருகிற ஒரு கலாச்சாரம் பெருகிக் கொண்டே வருகிறது. ஆனால், இந்த பண்டிகையின் நோக்கம் இது மட்டும் அல்ல என்று சொன்னால் சிலர் நம்ப கூட மாட்டார்கள்!

காணும் பொங்கல் என்பது, நம் உற்றார் உறவினர் ஒன்றுகூடி, நம்மை வந்து பார்க்க இயலாதவர்களை நேரில் சென்று பார்த்து, பெரியவர்களிடமிருந்து ஆசி வாங்குவது தான் முதல் நோக்கம். இதில் ஒரு மாபெரும் ‘உளவியல் ரகசியமும்’ உண்டு.

நம் நண்பர்கள் வட்டத்திலோ, உற்றார் உறவினர்களிலேயே சிலர், முந்தைய வருடத்தில் சில சங்கடங்களுக்கு உள்ளாகி, மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஏதோ சங்கடம் மனதை அரித்துக் கொண்டிருக்கலாம். பெரும்பாலும், யாரும் அதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். அல்லது, வெளியே சொல்ல முடியாத சங்கடமாக இருக்கலாம். மனசங்கடம் தான் உடல் வியாதிக்கு முதல் படி. இதில் தான், காணும் பொங்கலின் அசாத்தியமான பண்பாட்டு எண்ணம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை, சூரியனை கடவுளாக போற்றி, படையல் வைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் சந்தோசத்தை பகிர்ந்தளித்து, மிக உன்னதமாக இருக்கும் நம் மனதின் ஆனந்தத்தை நம்மையும் அறியாமலேயே அவர்களுக்கு தருகிறோம். சோர்வுற்றிருக்கிறவர்களும், அவர்களை அறியாமலேயே இந்த நல்ல அதிர்வலைகளை ஆழ்மனதில் வாங்கிக் கொள்கின்றனர். இந்த ஒரு கொடுத்தல்-வாங்குதலில் நம் குடும்பமே பாஸிடிவ் எனெர்ஜியுடன் முன்னேற அடித்தளம் அமைகிறது.

இந்த பொன்னாளில் குடும்பத்தாருடன் சுற்றுலா செல்லலாம். ஆனால் – அடிக்கடி சந்திப்பவர்களையே சந்தித்து, விடுமுறை போல் இந்நாளை கழிக்காமல், நெடு நாட்கள் பார்க்காத உறவினர்களையும், நண்பர்களையும் நேரில் பார்ப்பதை ஒரு நோக்கமாக கொண்டால், பண்டிகையின் தன்னலமற்ற உன்னத நோக்கம் நிறைவேறும்!

அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

“நான் ஐ.டி ஊழியர் சார்.. என் வீட்டில் மாடு எதுவும் கிடையாது! நான் ஏன் மாட்டு பொங்கல் கொண்டாட வேண்டும்? இது என்ன பழைமை!” என்று நக்கலாக கேட்பவர்களுக்கு, ஒரு எளிய சிந்தனை: நீங்கள் உணவருந்துவீர்களா இல்லை தினம் பட்டினியாக உள்ளீர்களா?

இது என்ன ஸார் கேள்வி, சாப்பிடாமல் யாராவது இருக்க முடியுமா?

தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் போஷாக்கிற்கு பால் சார்ந்த பானத்தை உண்கிறார்கள்.. அப்படி பாலுக்காக உபயோகப்படுத்திக்கொள்ளும் மாடுகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம்!

நான் வீகன் (Vegan).. கால்நடை சார்ந்த பொருட்களை உபயோகிக்கவே மாட்டேன்.. நான் ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாட வேண்டும்?

சரி, பால் சார்ந்த பொருட்கள் உபயோகிக்காமல் இருக்கலாம். இயற்கை விவசாயப் பொருட்களை உபயோகிக்கிறீர்களா? பஞ்சகவ்யத்திலிருந்து, மாட்டு சாணம் வரை உபயோகித்துத்தான் விளைவிக்கிறார்கள்.. வீகனாக இருந்தாலும், மாடுகளை நம்பித்தான் உங்கள் வாழ்வும் இருக்கிறது!

ஸார், நான் வீகன், மற்றும் ஆர்கானிக் உணவுப் பொருட்களே எடுத்துக் கொள்ள மாட்டேன்.. மாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்று அறியாமையால் கேட்பவர்கள், ஒரு சமூகத்தில் ஒருவரை நம்பித்தான் மற்றொருவரின் வாழ்வு இருக்கிறது என்ற புரிதல் இருக்கிறதா? அந்த புரிதல் இருந்தால், உங்களை சுற்றியிருக்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆரோக்கியத்திற்கு மாடுகளைத்தான் நம்பி இருக்கிறார்கள்! அவர்களை வாழவைக்கும் மாடுகளை போற்றுவதில் தவறில்லையே ஸார்?

சரி தான், நானும் மாடுகளுக்கு “தேங்க்ஸ்” சொல்லி விடுகிறேன்! இருங்க ஸார் – நன்றிக்கும் பக்திக்கும் உள்ள வித்தியாசத்தை கீழே விவரித்துள்ளேன். தமிழர்கள், மாடுகளை தெய்வமாக பார்க்கின்றோம். நம்மை வாழவைக்கும் உயிரினத்தை தெய்வமாக பாவித்து மாட்டுப் பொங்கல் விழா எடுக்கிறோம்! இதற்கு வெறும் ‘நன்றி’ போதாது, படையல் வைத்து பண்டிகையாக கொண்டாட மனம் பக்குவப்பட வேண்டும்!

தமிழ் பண்பாடு, மாடுகளை கடவுளாக பாவித்து, அதைப் போற்றிப், பேணி, நம் வாழ்வில் பங்கு பெறச் செய்து ஒரு சமூகமாக முன்னேறுவது! மனிதனின் உற்ற தோழனான மாடுகளை போற்றுவோம், வாழ்வில் மேன்மையடைவோம்.

அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துகள்!

சூரியனை பார்த்து, “ஹே, நீ வெயில் கொடுத்த.. நான் உழைத்தேன்.. அறுவடை செய்து ஆனந்தமாக இருக்கப்போகிறேன்.. உன் வேலையை நீ செய்ததுக்கு நன்றி!” என்று சொல்வது மேற்கத்திய சிந்தனையாக இருக்கிறது. 

இந்திய பண்பாடோ, சூரியனை கடவுளாக நேசித்து, “நீ கொடுத்த வெயிலால் தான் பயிர் இன்றைக்கு நன்றாக வளர்ந்து சாகுபடிக்கு தயாராக உள்ளது.. உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்” என இயற்கைக்கு மதிப்பு அளித்து, ‘பக்தியுடன்’ அணுகுவதாக இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் இந்த இரு கலாச்சாரத்திலும் எந்த வித்தியாசமும் தெரியாது. இருவரும் நன்றிதானே சொல்கிறார்கள் என்று நினைப்போம். நுணுக்கமாக இந்த அணுகுமுறையை பார்த்தால் – நம் வயோதிக காலத்தில், நம் பிள்ளைகள் நம்மை எப்படி வைத்துக்கொள்வார்கள் என்ற மனோதத்துவ ரகசியமே அடங்கியிருக்கும்!

இதனால் தான், இந்தியாவிற்கே உரிய ‘குடும்பம்’ என்ற வாழ்க்கை முறை சிதையாமல் இருக்கிறது. இதை, மேற்கத்தியவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. பணம் இருக்கிறதோ, இல்லையோ, வயதான காலத்தில் தனிமையிலோ அல்லது துணை இருந்தால் துணையுடன் மட்டும்தான் இருக்க முடியும். 10 பிள்ளைகள் பெற்றிருந்தாலும், யாரும் அவர்களை வைத்து காப்பாற்ற மாட்டார்கள்!

ஒரு பண்டிகையில் வெளிப்படும் ஒரு சிந்தனை, ஒரு குடும்பத்தை எப்படி ஒன்று சேர்க்கிறது என்று பாருங்களேன்! வார்த்தையால் யாரும் யாரிடமும் ‘நான் நல்லவன்’ ‘நான் நல்லவன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கப் போவதில்லை.. நம் கலாச்சாரத்தை ஏன் கடைபிடிக்கிறோம் என்று யோசித்து, கடைபிடித்தாலே, நல்ல வாழ்க்கை அமைந்திடுகிறது!

ஆக, நம் பண்பாட்டை அழிக்கும் எந்த ஒரு விசயத்தையும் இளம் தலைமுறையிடம் பரப்பி விட்டு, தலையை விட்டு வாலை பிடித்த கதையாக வயதான பிறகு அல்லல் பட வேண்டாம். 

நம் பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுவோம். அதில் ஒளிந்திருக்கும் ஆத்ம சக்தியை புரிந்து கொண்டு மேன்படுவோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்! 

Exit mobile version